திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.9 திருவீழிமிழலை
பண் - காந்தாரபஞ்சமம்
கேள்வியர் நாடொறும் ஓதும்நல் வேதத்தர் கேடிலா
வேள்விசெய் அந்தணர் வேதியர் வீழிமி ழலையார்
வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம்
ஆரியர் தம்மடி போற்றியென் பார்கட்க ணியரே.
1
கல்லின்நற் பாவையோர் பாகத்தர் காதலித் தேத்திய
மெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழிமி ழலையார்
நல்லினத் தார்செய்த வேள்விசெ குத்தெழு ஞாயிற்றின்
பல்லனைத் துந்தகர்த் தாரடி யார்பாவ நாசரே.
2
நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்ற
வெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமி ழலையார்
அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடிய
மஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே.
3
கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமி ழலையார்
தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்
அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.
4
பிறையுறு செஞ்சடை யர்விடை யார்பிச்சை நச்சியே
வெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழிமி ழலையார்
முறைமுறை யாலிசை பாடுவா ராடிமுன் தொண்டர்கள்
இறையுறை வாஞ்சியம் அல்லதெப் போதுமென் உள்ளமே.
5
வசையறு மாதவங் கண்டுவ ரிசிலை வேடனாய்
விசையனுக் கன்றருள் செய்தவர் வீழிமி ழலையார்
இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்லவ டமிட்டுத்
திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே.
6
சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நன் மூவிரு தொன்னூலர்
வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழிமி ழலையார்
காடரங் காவுமை காணஅண் டத்திமை யோர்தொழ
நாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே.
7
எடுத்தவன் மாமலைக் கீழவி ராவணன் வீழ்தர
விடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழிமி ழலையார்
படுத்துவெங் காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக்
கொடுத்தனர் இன்பங் கொடுப்பர் தொழக்குறை வில்லையே.
8
திக்கமர் நான்முகன் மாலண்டம் மண்டலந் தேடிட
மிக்கவர் தீத்திர ளாயவர் வீழிமி ழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே.
9
துற்றரை யார்துவ ராடையார் துப்புர வொன்றிலா
வெற்றரை யார்அறி யாநெறி வீழிமி ழலையார்
சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற சோதிதான்
மற்றறி யாவடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே.
10
வேதியர் கைதொழு வீழிமி ழலைவி ரும்பிய
ஆதியை வாழ்பொழில் காழியுள் ஞானசம் பந்தனாய்ந்
தோதிய ஒண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்
மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.80 திருவீழிமிழலை - திருவிராகம்
பண் - சாதாரி
சீர்மருவு தேசினொடு தேசமலி செல்வமறை யோர்கள்பணியத்
தார்மருவு கொன்றையணி தாழ்சடையி னானமர்ச யங்கொள்பதிதான்
பார்மருவு பங்கயமு யர்ந்தவயல் சூழ்பழன நீடஅருகே
கார்மருவு வெண்கனக மாளிகை கவின்பெருகு வீழிநகரே.
1
பட்டமுழ விட்டபணி லத்தினொடு பன்மறைகள் ஓதுபணிநற்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்யவருள் செய்தழல்கொள் மேனியவனூர்
மட்டுலவு செங்கமல வேலிவயல் செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்
விட்டுலவு தென்றல்விரை நாறுபதி வேதியர்கள் வீழிநகரே.
2
மண்ணிழி சுரர்க்குவளம் மிக்கபதி மற்றுமுள மன்னுயிர்களுக்
கெண்ணிழிவில் இன்பநிகழ் வெய்தஎழி லார்பொழில் இலங்கறுபதம்
பண்ணிழிவி லாதவகை பாடமட மஞ்ஞைநட மாடஅழகார்
விண்ணிழி விமானமுடை விண்ணவர் பிரான்மருவுவீழிநகரே.
3
செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நன்கலை தெரிந்தவவரோ
டந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅரனூர்
கொந்தலர் பொழிற்பழன வேலிகுளிர் தண்புனல் வளம்பெருகவே
வெந்திறல் விளங்கிவளர் வேதியர் விரும்புபதி வீழிநகரே.
4
பூதபதி யாகிய புராணமுனி புண்ணியநன் மாதைமருவிப்
பேதமதி லாதவகை பாகமிக வைத்தபெரு மானதிடமாம்
மாதவர்கள் அன்னமறை யாளர்கள் வளர்த்தமலி வேள்வியதனால்
ஏதமதி லாதவகை இன்பம்அமர் கின்றஎழில் வீழிநகரே.
5
மண்ணின்மறை யோர்மருவு வைதிகமும் மாதவமும் மற்றுமுலகத்
தெண்ணில்பொரு ளாயவை படைத்தஇமை யோர்கள்பெரு மானதிடமாம்
நண்ணிவரு நாவலர்கள் நாடொறும் வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்
விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர் நீள்புரிசை வீழிநகரே.
6
மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை மிக்கபுகைபோய்
அந்தர விசும்பணவி அற்புத மெனப்படரும் ஆழியிருள்வாய்
மந்தரம்நன் மாளிகை நிலாவுமணி நீடுகதிர் விட்டஒளிபோய்
வெந்தழல் விளக்கென விரும்பினர் திருந்துபதி வீழிநகரே.
7
ஆனவலி யிற்றசமு கன்றலைய ரங்கவணி யாழிவிரலால்
ஊனமரு யர்ந்தகுரு திப்புனலில் வீழ்தரவு ணர்ந்தபரனூர்
தேனமர் திருந்துபொழில் செங்கனக மாளிகை திகழ்ந்தமதிலோ
டானதிரு உற்றுவளர் அந்தணர் நிறைந்தஅணி வீழிநகரே.
8
ஏனவுரு வாகிமண் இடந்தஇமை யோனுமெழி லன்னவுருவம்
ஆனவனும் ஆதியினொ டந்தமறி யாதஅழல் மேனியவனூர்
வானணவும் மாமதிள் மருங்கலர் நெருங்கிய வளங்கொள்பொழில்வாய்
வேனலமர் வெய்திட விளங்கொளியின் மிக்கபுகழ் வீழிநகரே.
9
குண்டமண ராகியொரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடித்
தெண்டிசையு மில்லதொரு தெய்வமுள தென்பரது வென்னபொருளாம்
பண்டையய னன்னவர்கள் பாவனை விரும்புபரன் மேவுபதிசீர்
வெண்டரள வாள்நகைநன் மாதர்கள் விளங்குமெழில் வீழிநகரே.
10
மத்தமலி கொன்றைவளர் வார்சடையில் வைத்தபரன் வீழிநகர்சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்புதமிழ் மாலைகள்வலார்
சித்திர விமானம்அமர் செல்வமலி கின்றசிவ லோகமருவி
அத்தகு குணத்தவர்க ளாகியனு போகமொடி யோகவரதே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.85 திருவீழிமிழலை - திருவிராகம்
பண் - சாதாரி
மட்டொளி விரிதரு மலர்நிறை சுரிகுழல் மடவரல்
பட்டொளி மணியல்குல் உமையமை யுருவொரு பாகமாக்
கட்டொளிர் புனலொடு கடியர வுடனுறை முடிமிசை
விட்டொளி யுதிர்பிதிர் மதியவர் பதிவிழி மிழலையே.
1
எண்ணிற வரிவளை நெறிகுழல் எழில்மொழி யிளமுலைப்
பெண்ணுறும் உடலினர் பெருகிய கடல்விட மிடறினர்
கண்ணுறு நுதலினர் கடியதொர் விடையினர் கனலினர்
விண்ணுறு பிறையணி சடையினர் பதிவிழி மிழலையே.
2
மைத்தகு மதர்விழி மலைமகள் உருவொரு பாகமா
வைத்தவர் மதகரி யுரிவைசெய் தவர்தமை மருவினார்
தெத்தென இசைமுரல் சரிதையர் திகழ்தரும் அரவினர்
வித்தக நகுதலை யுடையவர் இடம்விழி மிழலையே.
3
செவ்வழ லெனநனி பெருகிய வுருவினர் செறிதரு
கவ்வழல் அரவினர் கதிர்முதிர் மழுவினர் தொழுவிலா
முவ்வழல் நிசிசரர் விறலவை யழிதர முதுமதிள்
வெவ்வழல் கொளநனி முனிபவர் பதிவிழி மிழலையே.
4
பைங்கண தொருபெரு மழலைவெ ளேற்றினர் பலியெனா
எங்கணு முழிதர்வர் இமையவர் தொழுதெழும் இயல்பினர்
அங்கணர் அமரர்கள் அடியிணை தொழுதெழ ஆரமா
வெங்கண அரவினர் உறைதரு பதிவிழி மிழலையே.
5
பொன்னன புரிதரு சடையினர் பொடியணி வடிவினர்
உன்னினர் வினையவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென விசைமுரல் சரிதையர் திகழ்தரு மார்பினில்
மின்னென மிளிர்வதொர் அரவினர் பதிவிழி மிழலையே.
6
அக்கினொ டரவரை யணிதிகழ் ஒளியதொ ராமைபூண்
டிக்குக மலிதலை கலனென இடுபலி யேகுவர்
கொக்கரை குழல்முழ விழவொடு மிசைவதொர் சரிதையர்
மிக்கவர் உறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.
7
பாதமொர் விரலுற மலையடர் பலதலை நெரிதரப்
பூதமொ டடியவர் புனைகழல் தொழுதெழு புகழினர்
ஓதமொ டொலிதிரை படுகடல் விடமுடை மிடறினர்
வேதமொ டுறுதொழின் மதியவர் பதிவிழி மிழலையே.
8
நீரணி மலர்மிசை உறைபவன் நிறைகடல் உறுதுயில்
நாரண னெனஇவர் இருவரும் நறுமல ரடிமுடி
ஓருணர் வினர்செல லுறலரு முரவினொ டொளிதிகழ்
வீரணர் உறைவது வெறிகமழ் பொழில்விழி மிழலையே.
9
இச்சைய ரினிதென இடுபலி படுதலை மகிழ்வதோர்
பிச்சையர் பெருமையை யிறைபொழு தறிவென வுணர்விலர்
மொச்சைய அமணரும் முடைபடு துகிலரும் அழிவதோர்
விச்சைய ருறைவது விரைகமழ் பொழில்விழி மிழலையே.
10
உன்னிய அருமறை யொலியினை முறைமிகு பாடல்செய்
இன்னிசை யவருறை யெழில்திகழ் பொழில்விழி மிழலையை
மன்னிய புகலியுள் ஞானசம் பந்தன வண்டமிழ்
சொன்னவர் துயரிலர் வியனுல குறுகதி பெருவரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.98 திருவீழிமிழலை - திருமுக்கால்
பண் - சாதாரி
வெண்மதி தவழ்மதில் மிழலையு ளீர்சடை
ஒண்மதி அணியுடை யீரே
ஒண்மதி அணியுடை யீருமை உணர்பவர்
கண்மதி மிகுவது கடனே.
1
விதிவழி மறையவர் மிழலையு ளீர்நடம்
சதிவழி வருவதொர் சதிரே
சதிவழி வருவதொர் சதிருடை யீருமை
அதிகுணர் புகழ்வதும் அழகே.
2
விரைமலி பொழிலணி மிழலையு ளீரொரு
வரைமிசை உறைவதும் வலதே
வரைமிசை உறைவதொர் வலதுடை யீருமை
உரைசெயும் அவைமறை யொலியே.
3
விட்டெழில் பெறுபுகழ் மிழலையு ளீர்கையில்
இட்டெழில் பெறுகிற தெரியே
இட்டெழில் பெறுகிற தெரியுடை யீர்புரம்
அட்டது வரைசிலை யாலே.
4
வேணிகர் கண்ணியர் மிழலையு ளீர்நல
பானிகர் உருவுடை யீரே
பானிகர் உருவுடை யீரும துடனுமை
தான்மிக உறைவது தவமே.
5
விரைமலி பொழிலணி மிழலையு ளீர்சென்னி
நிரையுற அணிவது நெறியே
நிரையுற அணிவதோர் நெறியுடை யீரும
தரையுற அணிவன அரவே.
6
விசையுறு புனல்வயல் மிழலையு ளீர்அர
வசையுற அணிவுடை யீரே
அசையுற அணிவுடை யீருமை அறிபவர்
நசையுறு நாவினர் தாமே.
7
விலங்கலொண் மதிளணி மிழலையு ளீரன்றவ்
இலங்கைமன் இடர்கெடுத் தீரே
இலங்கைமன் இடர்கெடுத் தீருமை யேத்துவார்
புலன்களை முனிவது பொருளே.
8
வெற்பமர் பொழிலணி மிழலையு ளீருமை
அற்புதன் அயனறி யானே
அற்புதன் அயனறி யாவகை நின்றவன்
நற்பதம் அறிவது நயமே.
9
வித்தக மறையவர் மிழலையு ளீரன்று
புத்தரொ டமணழித் தீரே
புத்தரொ டமணழித் தீருமைப் போற்றுவார்
பத்திசெய் மனமுடை யவரே.
10
விண்பயில் பொழிலணி மிழலையு ஈசனைச்
சண்பையுள் ஞானசம் பந்தன்
சண்பையுள் ஞானசம் பந்தன தமிழிவை
ஒண்பொருள் உணர்வதும் உணர்வே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.111 திருவீழிமிழலை - ஈரடி
பண் - பழம்பஞ்சுரம்
வேலி னோர்தரு கண்ணி னாளுமை
பங்க னங்கணன் மிழலை மாநகர்
ஆல நீழலின் மேவி னானடிக்
கன்பர் துன்பிலரே.
1
விளங்கு நான்மறை வல்ல வேதியர்
மல்கு சீர்வளர் மிழலை யானடி
உளங்கொள் வார்தமை உளங்கொள் வார்வினை
ஒல்லை யாசறுமே.
2
விசையி னோடெழு பசையு நஞ்சினை
யசைவு செய்தவன் மிழலை மாநகர்
இசையு மீசனை நசையின் மேவினான்
மிசை செயாவினையே.
3
வென்றி சேர்கொடி மூடு மாமதிள்
மிழலை மாநகர் மேவி நாடொறும்
நின்ற ஆதிதன் அடிநி னைப்பவர்
துன்ப மொன்றிலரே.
4
போத கந்தனை யுரிசெய் தோன்புயல்
நேர்வ ரும்பொழில் மிழலை மாநகர்
ஆத ரஞ்செய்த அடிகள் பாதம
லாலொர் பற்றிலமே.
5
தக்கன் வேள்வியைச் சாடி னார்மணி
தொக்க மாளிகை மிழலை மேவிய
நக்க னாரடி தொழுவர் மேல்வினை
நாடொ றுங்கெடுமே.
6
போர ணாவுமுப் புரமெ ரித்தவன்
பொழில்கள் சூழ்தரு மிழலை மாநகர்ச்
சேரு மீசனைச் சிந்தை செய்பவர்
தீவி னைகெடுமே.
7
இரக்க மிற்றொழில் அரக்க னாருடல்
நெருக்க னான்மிகு மிழலை யானடி
சிரக்கொள் பூவென ஒருக்கி னார்புகழ்
பரக்கும் நீள்புவியே.
8
துன்று பூமகன் பன்றி யானவன்
ஒன்று மோர்கிலா மிழலை யானடி
சென்று பூம்புனல் நின்று தூவினார்
நன்று சேர்பவரே.
9
புத்தர் கைச்சமண் பித்தர் பொய்க்குவை
வைத்த வித்தகன் மிழலை மாநகர்
சித்தம் வைத்தவர் இத்த லத்தினுள்
மெய்த்த வத்தவரே.
10
சந்த மார்பொழில் மிழலை யீசனைச்
சண்பை ஞானசம் பந்தன் வாய்நவில்
பந்த மார்தமிழ் பத்தும் வல்லவர்
பத்த ராகுவரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.116 திருவீழிமிழலை - திருஇயமகம்
பண் - பழம்பஞ்சுரம்
துன்று கொன்றைநஞ் சடையதே தூய கண்டம்நஞ் சடையதே
கன்றின் மானிடக் கையதே கல்லின் மானிடக் கையதே
என்று மேறுவ திடவமே என்னி டைப்பலி யிடவமே
நின்ற தும்மிழலை யுள்ளுமே நீரெனைச் சிறிதும் உள்ளுமே.
1
ஓதி வாயதும் மறைகளே உரைப்ப தும்பல மறைகளே
பாதி கொண்டதும் மாதையே பணிகின் றேன்மிகு மாதையே
காது சேர்கனங் குழையரே காத லார்கனங் குழையரே
வீதி வாய்மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா.
2
பாடு கின்றபண் டாரமே பத்த ரன்னபண் டாரமே
சூடு கின்றது மத்தமே தொழுத என்னையுள் மத்தமே
நீடு செய்வதுந் தக்கதே நின்ன ரைத்திகழ்ந் தக்கதே
நாடு சேர்மிழலை யூருமே நாகம் நஞ்சழலை யூருமே.
3
கட்டு கின்றகழல் நாகமே காய்ந்த தும்மதனன் ஆகமே
இட்ட மாவதிசை பாடலே யிசைந்த நூலினமர் பாடலே
கொட்டு வான்முழவம் வாணனே குலாய சீர்மிழலை வாணனே
நட்ட மாடுவது சந்தியே நானுய் தற்கிரவு சந்தியே.
4
ஓவி லாதிடுங் கரணமே யுன்னு மென்னுடைக் கரணமே
ஏவு சேர்வுநின் னாணையே யருளி நின்னபொற் றாணையே
பாவி யாதுரை மெய்யிலே பயின்ற நின்னடி மெய்யிலே
மேவி னான்விறற் கண்ணனே மிழலை மேயமுக் கண்ணனே.
5
வாய்ந்த மேனியெரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடுந டஞ்செயுங் காலனே
போந்த தெம்மிடை யிரவிலே உம்மி டைக்கள்வ மிரவிலே
ஏய்ந்த தும்மிழலை யென்பதே விரும்பி யேயணிவ தென்பதே.
6
அப்பி யன்றகண் ணயனுமே அமரர் கோமகனு மயனுமே
ஒப்பி லின்றமரர் தருவதே ஒண்கை யாலமரர் தருவதே
மெய்ப்ப யின்றவ ரிருக்கையே மிழலை யூரும திருக்கையே
செப்பு மின்னெருது மேயுமே சேர்வுமக் கெருது மேயுமே.
7
தானவக் குலம் விளக்கியே தாரகைச் செல விளக்கியே
வான டர்த்தகயி லாயமே வந்து மேவுகயி லாயமே
தானெ டுத்தவல் லரக்கனே தடமு டித்திர ளரக்கனே
மேன டைச்செல விருப்பனே மிழலை நற்பதி விருப்பனே.
8
காய மிக்கதொரு பன்றியே கலந்த நின்னவுரு பன்றியே
ஏய விப்புவி மயங்கவே யிருவர் தாமன மயங்கவே
தூய மெய்த்திரள் அகண்டனே தோன்றி நின்றமணி கண்டனே
மேய வித்துயில் விலக்கணா மிழலை மேவிய விலக்கணா.
9
கஞ்சி யைக்குலவு கையரே கலக்க மாரமணர் கையரே
அஞ்ச வாதிலருள் செய்யநீ யணைந்தி டும்பரிசு செய்யநீ
வஞ்ச னேவரவும் வல்லையே மதித்தெ னைச்சிறிதும் வல்லையே
வெஞ்ச லின்றிவரு வித்தகா மிழலை சேரும்விறல் வித்தகா.
10
மேய செஞ்சடையின் அப்பனே மிழலை மேவியவெ னப்பனே
ஏயுமா செய விருப்பனே இசைந்த வாசெய விருப்பனே
காய வர்க்கசம் பந்தனே காழி ஞானசம் பந்தனே
வாயு ரைத்ததமிழ் பத்துமே வல்லவர்க் குமிவை பத்துமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.119 திருவீழிமிழலை
பண் - புறநீர்மை
புள்ளித்தோ லாடை பூண்பது நாகம்
    பூசுசாந் தம்பொடி நீறு
கொள்ளீத்தீ விளக்கு கூளிகள் கூட்டங்
    காளியைக் குணஞ்செய்கூத் துடையோன்
அள்ளற் காராமை அகடு வான்மதியம்
    ஏய்க்கமுட் டாழைக ளானை
வெள்ளைக்கொம் பீனும் விரிபொழில் வீழி
    மிழலையா னெனவினை கெடுமே.
1
இசைந்தவா றடியா ரிடுதுவல் வானோர்
    இழுகசந் தனத்திளங் கமலப்
பசும்பொன்வா சிகைமேற் பரப்புவாய் கரப்பாய்
    பத்திசெய் யாதவர் பக்கல்
அசும்புபாய் கழனி யலர்கயன் முதலோ
    டடுத்தரிந் தெடுத்தவான் சும்மை
விசும்புதூர்ப் பனபோல் விம்மிய வீழி
    மிழலையா னெனவினை கெடுமே.
2
நிருத்தனா றங்கன் நீற்றன் நான்மறையன்
    நீலமார் மிடற்றன்நெற் றிக்கண்
ஒருத்தன்மற் றெல்லா வுயிர்கட்கும் உயிராய்
    யுளனிலன் கேடிலி யுமைகோன்
திருத்தமாய் நாளும் ஆடநீர்ப் பொய்கை
    சிறியவர் அறிவினின் மிக்க
விருத்தரை யடிவீழ்ந் திடம்புகும் வீழி
    மிழலையா னெனவினை கெடுமே.
3
தாங்கருங் காலந் தவிரவந் திருவர்
    தம்மொடுங் கூடினா ரங்கம்
பாங்கினால் தரித்துப் பண்டுபோ லெல்லாம்
    பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடிமாச்
    செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழால் வெயில்புகா வீழி
    மிழலையா னெனவினை கெடுமே.
4
கூசுமா மயானங் கோயில்வா யிற்கண்
    குடவயிற் றனசில பூதம்
பூசுமா சாந்தம் பூதிமெல் லோதி
    பாதிநற் பொங்கர வரையோன்
வாசமாம் புன்னை மௌவல்செங் கழுநீர்
    மலரணைந் தெழுந்தவான் தென்றல்
வீசுமாம் பொழில்தேன் துவலைசேர் வீழி
    மிழலையா னெனவினை கெடுமே.
5
பாதியோர் மாதர் மாலுமோர் பாகர்
    பங்கயத் தயனுமோர் பாலர்
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற
    அடிகளார் அமரர்கட் கமரர்
போதுசேர் சென்னிப் புரூரவாப் பணிசெய்
    பூசுரர் பூமகன் அனைய
வேதியர் வேதத் தொலியறா வீழி
    மிழலையா னெனவினை கெடுமே.
6
தன்றவம் பெரிய சலந்தர னுடலந்
    தடிந்தசக் கரமெனக் கருளென்
றன்றரி வழிபட் டிழிச்சிய விமானத்
    திறையவன் பிறையணி சடையன்
நின்றநாட் காலை யிருந்தநாள் மாலை
    கிடந்தமண் மேல்வரு கலியை
வென்றவே தியர்கள் விழாவறா வீழி
    மிழலையா னெனவினை கெடுமே.
7
கடுத்தவா ளரக்கன் கைலையன் றெடுத்த
    கரமுரஞ் சிரநெரிந் தலற
அடர்த்ததோர் விரலால் அஞ்செழுத் துரைக்க
    அருளினன் தடமிகு நெடுவாள்
படித்தநான் மறைகேட் டிருந்தபைங் கிளிகள்
    பதங்களை யோதப்பா டிருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழி
    மிழலையா னெனவினை கெடுமே.
8
அளவிட லுற்ற அயனொடு மாலும்
    அண்டமண் கெண்டியுங் காணா
முளையெரி யாய மூர்த்தியைத் தீர்த்த
    முக்கண்எம் முதல்வனை முத்தைத்
தளையவிழ் கமலத் தவிசின்மேல் அன்னந்
    தன்னிளம் பெடையொடும் புல்கி
விளைகதிர்க் கவரி வீசவீற் றிருக்கும்
    மிழலையா னெனவினை கெடுமே.
9
கஞ்சிப்போ துடையார் கையிற்கோ சாரக்
    கலதிகள் கட்டுரை விட்டு
அஞ்சித்தே விரிய எழுந்தநஞ் சதனை
    யுண்டம ரர்க்கமு தருளி
இஞ்சிக்கே கதலிக் கனிவிழக் கமுகின்
    குலையொடும் பழம்விழத் தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர்பொழில் வீழி
    மிழலையா னெனவினை கெடுமே.
10
வேந்தர்வந் திறைஞ்ச வேதியார் வீழி
    மிழலையுள் விண்ணிழி விமானத்
தேய்ந்ததன் றேவி யோடுறை கின்ற
    ஈசனை யெம்பெரு மானைத்
தோய்ந்தநீர்த் தோணி புரத்துறை மறையோன்
    தூமொழி ஞானசம் பந்தன்
வாய்ந்தபா மாலை வாய்நவில் வாரை
    வானவர் வழிபடு வாரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com